சம வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் ; 20 விநாடிகளில் டாஸ் மூலம் வெற்றியாளரைத் தேர்வு செய்த அதிகாரிகள்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு பெண் வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றதால், நாணயத்தைச் சுண்டிப்போட்டு வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்ட சுவாரசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புளோரிடா மாகாணத்தின் அட்லாண்டிக் பீச் நகர கமிஷனர் பதவிக்கான தேர்தல் கடந்த நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்றது.
இதில் ஜெனிபர் லாக்னர் மற்றும் லிசா ஹெரால்டு ஆகிய இருவரும் போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணப்பட்டபோது, இருவரும் தலா 3,162 வாக்குகளைப் பெற்று சமநிலையில் இருந்தனர்.

இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் மறுவாக்கு எண்ணிக்கையை மேற்கொண்டனர். எனினும், அதிலும் முடிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால், புளோரிடா மாகாண சட்டத்தின்படி நாணயத்தைச் சுண்டிப்போட்டு வெற்றியாளரைத் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான நிகழ்வு ஜாக்சன்வில்லில் உள்ள டுவால் கவுண்டி தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இரு வேட்பாளர்களும் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளில் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெறுபவர் தேர்தலில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என விதிமுறை வகுக்கப்பட்டது.
முதலாவது சுற்றில் லிசா ஹெரால்டு, நாணயத்தின் தலைப்பக்கம் மேலே வரும் எனத் தேர்வு செய்தார். ஆனால், பூ விழுந்ததால் ஜெனிபர் லாக்னருக்கு முதல் வெற்றி கிடைத்தது. இரண்டாவது சுற்றில் ஜெனிபர் லாக்னர் தலை விழும் எனத் தேர்வு செய்தார்.
அவர் கணித்தபடியே நாணயத்தின் தலைப்பக்கம் மேலே வந்தது. இதனால், தொடர்ந்து இரண்டு சுற்றுகளிலும் வெற்றி பெற்ற ஜெனிபர் லாக்னர் தேர்தலில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த ஒட்டுமொத்தத் தேர்வு நடவடிக்கையும் வெறும் 20 விநாடிகளில் நிறைவடைந்தது. இதையடுத்து வெற்றி பெற்ற ஜெனிபர் லாக்னருக்கு வாழ்த்துகள் குவிந்தன.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட லிசா ஹெரால்டும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
புளோரிடா மாகாண சட்டத்தின்படி, தேர்தலில் இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றால், நாணயத்தைச் சுண்டிப்போடுவது உள்ளிட்ட அதிர்ஷ்ட முறைகள் மூலம் வெற்றியாளரைத் தீர்மானிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.