டிக்டொக் செயலி தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றம் அதிரடி அறிவிப்பு!
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஊழியர்கள் தமது பணிகளுக்காக சாதனங்களிலிருந்து டிக்டொக் செயலியை நீக்க வேண்டும் என நாடாளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் ஊழியர்கள், தாம் உத்தியோகபூர்வ பணிகளுக்காக பயன்படுத்தும் தொலைபேசிகள், மடிக்கணினிகள் மற்றும் டெப்லெட் கணினிகளிலிருந்து டிக்டொக்கை நீக்க வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் ரொபர்ட்டா மெட்சோலா, செயலளார் நாயகம் அலெஸாண்ட்ரோ சியோக்செட்டி ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பணியாற்றும் சுமார் 8000 ஊழியர்களுக்கு இது தொடர்பான குறிப்பொன்றை நாடாளுமன்றத்தின் புத்தாக்கு மற்றும் தொழில்நுட்ப ஆதரவுக்கான பணியகம் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊழியர்களும் தமது பிரத்தியேக சாதனங்களிலிருந்தும் டிக்டொக்கை நீக்குமாறு பலமாக சிபாரிசு செய்யப்படுவதாகவும் அக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.