பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகள்கூட நாடுகடத்தப்படும் அபாயம் ; இலங்கையர்களின் நிலை என்ன?
சட்டவிரோதமாக பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களுக்கு அங்குப் பிறந்த பிள்ளைகள்கூட நாடுகடத்தப்படும் நிலை உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத் முன்வைத்துள்ள திட்டத்தின்படி, புலம்பெயர்தல் நிலை இரத்து செய்யப்பட்ட பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளும்கூட இனி நாடு கடத்தப்படலாம் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குழந்தை பிறந்ததைக் காரணம் காட்டி தங்கியிருக்க முடியாது
ஏதிலி நிலை நிறைவடைந்த பின்பும், பிரித்தானியாவில் குழந்தை பெற்றுக்கொண்டு, தங்களுக்கு பிரித்தானியாவில் குழந்தை பிறந்ததைக் காரணம் காட்டி, பிரித்தானியாவிலேயே தங்கியிருக்க முயல்வோரைத் தடுப்பதற்காகவே இப்படியொரு திட்டத்தை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிள்ளைகளைக் காரணம் காட்டி பிரித்தானியாவின் புகலிட அமைப்பைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இந்த ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை சட்டவிரோதமாக பிரித்தானியா சென்று , அந்நாட்டு குடியுரிமை இன்றி வாழும் இலங்கையர்கள் , மற்றும் இந்தியர்கள் மத்தியில் பிரித்தானியாவின் இந்த அறிவிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.