கனடாவில் தாக்கல் செய்யப்பட்ட விநோத வழக்கு;நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
கனடாவில் வாடகைக் குடியிருப்பாளர் ஒருவருக்கு எதிராக வீட்டு உரிமையாளர் வினோதமான வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வாடகைக் குடியிருப்பாளர் வீட்டின் மாடியில் புகைப்பிடித்தார் எனவும் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றுமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
பால்கனியில் புகை பிடித்ததற்காக வாடகை குடியிருப்பாளர்களை வெளியேற்ற முயன்ற வீட்டு உரிமையாளர் (landlords) போதுமான காரணங்களை நிரூபிக்கவில்லை என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இதனால், வாடகை முடிப்பதற்கான அறிவிப்பை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இந்த தீர்ப்பு நீதிபதி ஜான் எஸ். ஹார்வியினால் வழங்கப்பட்டது, மேலும் அது பிரிட்டிஷ் கொலம்பியாவின் குடியிருப்பு வாடகை மன்றத்தின் (Residential Tenancy Branch - RTB) முந்தைய முடிவை மாற்றியது.
குர்பான், ரஷ்னா மற்றும் சப்ரீனா மாலிக் என்ற குடும்பத்தினர், 2023 செப்டம்பரில், கொக்விட்லம் நகரில் உள்ள நான்கு யூனிட் வீடுகளில் ஒன்றில் வசித்து வந்தனர்.
“பிற குடியிருப்பாளர்கள் அல்லது வீட்டு உரிமையாளர்களை கடுமையாகத் தொந்தரவு செய்தனர்” என்ற அடிப்படையில் வாடகைக் குடியிருப்பாளர்களான குர்பான் குடும்பத்தினர் மீது வாடகை முடிப்பதற்கான ஒரு மாத முன்னறிவிப்பு வழங்கப்பட்டது.
குர்பான் குடும்பத்தில் ஒருவர் (K.M.) வெளியிலுள்ள பால்கனியில் புகை பிடித்தததனால் இந்த அறிவிப்பை வழங்கியதாக வீட்டின் உரிமையாளர்கள் வில்லியம் மற்றும் ஜூலி ஹோகார்த் தெரிவித்துள்ளனர்.
“புகைப்பிடிப்பதற்காக தினமும் $10,000 அபராதம் விதிக்கப்படலாம்” என உள்ளூர் சட்டங்களை (municipal bylaw) மேற்கோளாக காட்டி வீட்டு உரிமையாளர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த சட்டம் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் (parks, civic facilities) மட்டுமே பொருந்தும். தனியார் குடியிருப்புகளில் இது பொருந்தாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதனால், பால்கனியில் புகை பிடித்ததற்காக வாடகையாளர்களை வெளியேற்ற உரிமையாளர்கள் சொல்வது போதுமான ஆதாரமல்ல என நீதிபதி கூறியுள்ளார்.