பின்லேடனை வேட்டையாடியவர் டிரம்ப் மீது கடும் விமர்சனம்
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி மூன்று வாரங்கள் கடந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளது உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது.
இந்த இக்கட்டான சூழலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டுமே காரணம் என சிஐஏ முன்னாள் இயக்குனர் லியோன் பனெட்டா சாடியுள்ளார்.
போதிய திட்டமிடல் இன்றி ஒரு போருக்குள் அமெரிக்காவை டிரம்ப் தள்ளியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முறையான கூட்டணி மற்றும் திட்டமிடல் இல்லாத போர்
இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட தலைவர் கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அவரது மகன் மொஜ்தபா புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவர் தனது தந்தையை விடவும் கடும்போக்குடையவர் என்பதால், பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன.
மறுபுறம், நேட்டோ நாடுகளை டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்ததால், தற்போதைய நெருக்கடியில் எந்தவொரு நட்பு நாடும் அமெரிக்காவிற்கு ராணுவ உதவி வழங்க முன்வரவில்லை.
48 மணி நேரத்திற்குள் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழிப்பேன் என டிரம்ப் மிரட்டியுள்ளார்.
முறையான கூட்டணி மற்றும் திட்டமிடல் இல்லாத இந்த போர், அமெரிக்காவிற்கு ஒரு பெரும் வியூகத் தோல்வியாகவே பனெட்டா பார்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சிஐஏ முன்னாள் இயக்குனர் லியோன் பனெட்டாதான் பின்லேடனை வேட்டையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.