தற்கொலை உபகரணங்களை விற்பனை செய்த உக்ரைன் இணையதளம் முடக்கம்
கனடாவிற்கு "தொடர்ச்சியாக" தற்கொலைக்கான நச்சுப் பொருட்களை அனுப்பி வந்த உக்ரைனைச் சேர்ந்த லியோனிட் ஜாகுடென்கோ என்பவனின் இணையதளம், ஊடகங்களின் தலையீடு மற்றும் பாதிக்கப்பட்ட தாயின் போராட்டத்தை அடுத்து முடக்கப்பட்டுள்ளது.
எனினும், பிற விற்பனைத் தளங்களில் உள்ள தானியங்கி செய்திகள் அவன் தனது சட்டவிரோத வணிகத்தை முழுமையாக நிறுத்தவில்லை என்பதைக் காட்டுகின்றன.
இதனால், பாதிக்கப்படக்கூடிய இளம் கனடியர்கள் இனி இத்தகைய ஆபத்தான நச்சுப் பொருட்களை இணையத்தில் பெற முடியாதவாறு கடுமையான சட்ட மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஒட்டாவாவைச் சேர்ந்த 22 வயது மாணவியான அன்னேகா தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணம் குறித்து கண்ணீருடன் பேசிய அவரது தாய் சூசன் டாலின் ஓ'க்ரேடி, "அவள் மீண்டும் இந்த கதவு வழியாக வரமாட்டாள் என்பதை நம்புவதே கடினமாக உள்ளது. இது என்னால் ஒருபோதும் கடந்து செல்ல முடியாத ஒரு இழப்பு" என்று கூறினார்.
மரபியல் ஆலோசகராக வரவிருந்த திறமையான அன்னேகா, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ஆராய்ச்சி நிதி குறைப்பால் வேலை கிடைக்காது என்று பயந்ததாகவும் அவரது தாய் தெரிவித்தார்.
சோகம் என்னவென்றால், அவர் இறந்த அடுத்த நாள் காலையிலேயே (12 மணி நேரத்திற்குள்) அவருக்கு வேலை வாய்ப்பு கடிதம் வந்து சேர்ந்துள்ளது. மகள் இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அவரது பெற்றோர், அன்னேகாவின் கிரெடிட் கார்டு அறிக்கைகளை ஆய்வு செய்தபோது, உக்ரைனின் 'மோனோபேங்க்' மூலம் சுமார் 124 கனடிய டாலர்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது.
இது 'SN' என அழைக்கப்படும் தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் ஒரு வீரியமிக்க நச்சுப் பொருளை விற்பனை செய்யும் உக்ரைன் இணையதளத்தின் விலையோடு ஒத்துப்போனது.
இதே நச்சுப் பொருளைத்தான் ஒன்டாரியோவைச் சேர்ந்த கென்னத் லா (Kenneth Law) என்பவனும் 16 வயது சிறுவர்கள் வரை விற்று வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட கென்னத் லா, கனடா மற்றும் உலகெங்கும் 1,000-க்கும் மேற்பட்ட நச்சுப் பொட்டலங்களை அனுப்பியதாக ஒப்புக்கொண்டிருந்தார்.
குறித்த நபர் 2023-ல் கைது செய்யப்பட்ட பிறகும், 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் இந்த நச்சுப் பொருளால் 29 மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.