ஐரோப்பாவில் கோர தாண்டவமாடும் வெப்பஅலை ; ஸ்பெயின், பிரான்சில் 2000 பேர் பலி
ஐரோப்பாவில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டுள்ள கடுமையான மாற்றங்களால் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பல பகுதிகளில் வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளதுடன், இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறையாத நிலை காணப்படுகிறது.
கடுமையான வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் ஆறுகள், குளங்கள் மற்றும் ஏனைய நீர்நிலைகளை நாடி வருகின்றனர்.

அதேவேளை, வெப்ப அலையால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதுடன், மின்சாரத் துண்டிப்பு, குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகளில் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், உலக சராசரியுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பா இரண்டு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருவதாக எச்சரித்துள்ளார்.
மேலும், கடந்த ஜூன் 21 ஆம் திகதி முதல் ஐரோப்பா முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு முன்னதாகவே தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், ஜூன் மாதத்தில் மட்டும் ஸ்பெயினில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெப்ப அலையின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகரிப்பாகும்.