கனடாவில் தேடப்படும் ஆபத்தான பாலியல் குற்றவாளி
கொலையாளி மற்றும் மிக ஆபத்தான பாலியல் குற்றவாளியான கிறிஸ்டோபர் வாட்ஸ் (66), கனடா முழுவதும் தேடப்பட்டு வந்த நிலையில், ஒன்டாரியோவின் ஹாமில்டன் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மான்ட்ரியல் இல்லம் ஒன்றிலிருந்து தப்பிச் சென்ற இவரைத் தேடி, கனடா காவல்துறை நாடு தழுவிய பிடியாணை பிறப்பித்திருந்தது.
கடந்த மே 28 அன்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வாட்ஸ், மான்ட்ரியலில் உள்ள தங்குமிடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால், ஜூன் 4 ஆம் திகதி முதல் அவர் அங்கிருந்து தலைமறைவானார்.

இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு மான்ட்ரியல் காவல்துறை பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், ஜூன் 9 ஆம் திகதி ஒன்டாரியோவின் பர்லிங்டன் பகுதியில் உள்ள லாசாலே பூங்காவில், வாட்ஸின் பெயரில் பதிவு செய்யப்பட்ட கார் ஒன்று கேட்பாரற்று நிற்பதை ஹால்டன் பகுதி காவல்துறை அதிகாரிகள் கவனித்தனர்.
அந்த காரை ரகசியமாகக் கண்காணித்து வந்த காவல்துறை, அன்று இரவு அதன்படியே அவரைக் கைது செய்தது. அவர் தப்பி ஓடிய ஜூன் 4 முதல் கைது செய்யப்பட்ட ஜூன் 9 வரையிலான ஐந்து நாட்களில் அவர் எங்குச் சென்றார், என்ன செய்தார் என்பதைப் புலனாய்வாளர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதற்காக, வாட்ஸுக்குச் சொந்தமான 'சுபாரு அவுட்பேக்' காரின் புகைப்படத்தை ஹால்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 905-825-4777 என்ற எண்ணில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அமண்டா ரேமண்ட் என்ற பெண்ணின் மரண வழக்கில், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்காக கிறிஸ்டோபர் வாட்ஸுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தனது சிறைத்தண்டனையை முடித்து 2015 இல் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர் என்பதால், விடுதலையான பின் 10 ஆண்டுகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.