110 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இளைஞருக்கு கிடைத்த மறுவாழ்வு
அமெரிக்காவில் மிக மோசமான சாலை விபத்துக்கு காரணமான நபருக்கு விதிக்கப்பட்ட 110 ஆண்டுகள் சிறைத்தண்டனையானது மாகண நிர்வாகத்தால் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞருக்காக மில்லியன் கணக்கான அமெரிக்க மக்களும் ஒருசில தொலைக்காட்சி பிரபலங்களும் போராடி வந்த நிலையில், நீதிமன்றம் அளித்திருந்த 110 ஆண்டுகள் சிறைத்தண்டனையை கொலராடோ மாகாண நிர்வாகம் 10 ஆண்டுகளாக அதிரடியாக குறைத்துள்ளது.
குறித்த தகவலை கொலராடோ மாகாண ஆளுநர் Jared Polis தொடர்புடைய இளைஞருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். கியூபாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவரான 26 வயது Aguilera-Mederos சம்பவத்தன்று, 2019 ஏப்ரல் மாதம் தமது கனரக லொறியில் மரக்கட்டைகளை எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் சாய்வான சாலையில் கட்டுப்பாட்டை இழந்த இவரது லொறி, வரிசையாக பல வாகனங்களில் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன் நால்வர் மரணத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட Aguilera-Mederos மீது 27 பிரிவுகளில் குற்றச்சாட்டு பதியப்பட்டு அதிகபட்ச தண்டனையாக 110 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பல மில்லியன் மக்களின் கவனத்தை ஈர்க்க, அவர்கள் அந்த இளைஞருக்காக மாகாண ஆளுநருக்கு மனு அளித்தனர். தற்போது 5 மில்லியன் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாகாண ஆளுநர் தமக்கிருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, சிறைத்தண்டனையை குறைத்துள்ளார்.
மேலும், Aguilera-Mederos ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு பின்னர் நிபந்தனைகளுடன் வெளிவர மனு அளிக்கவும் வாய்பளிக்கப்பட்டுள்ளது.