கனடாவில் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
கனடாவின், சர்வதேச மாணவர்களுக்கான அனுமதி (Study Permit) கட்டுப்பாடுகள் இந்திய மாணவர்களை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளன.
கடந்த காலங்களில் இந்திய மாணவர்களின் விருப்ப இடமாக இருந்த கனடா, தற்போது தனது கவர்ச்சியை இழந்து வருவதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025 ஆரம்பத்தில், கனடா இரண்டாவது ஆண்டாகவும் சர்வதேச மாணவர் அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையை குறைத்தது.

விசா மோசடி
இது தற்காலிக குடியேற்ற நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் முயற்சியும், மாணவர் விசா மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையின் ஓர் பகுதியாகும்.
அதன்படி, 2025 ஆகஸ்ட் மாதத்தில் இந்திய மாணவர்களின் 74% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன, என குடியேற்றத்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இது 2023 ஆகஸ்ட் மாதத்தில் இருந்த 32% நிராகரிப்பு விகிதத்தை விட இரட்டிப்பாக உயர்வடைந்துள்ளது. குறித்த மாதங்களில் சர்வதேச மாணவர்களின் சுமார் 40% விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
அதே சமயத்தில், சீன மாணவர்களின் 24% விண்ணப்பங்களே நிராகரிக்கப்பட்டன.
இந்தியாவிலிருந்து விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கையும் கடுமையாகக் குறைந்துள்ளது — 2023 ஆகஸ்டில் 20,900 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 2025 ஆகஸ்டில் அது வெறும் 4,515 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக கனடாவுக்கான சர்வதேச மாணவர்களில் இந்தியா முதலிடத்தில் இருந்தது.

ஆனால் இப்போது, 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதி பெற்ற நாடுகளில், அதிகப்படியான நிராகரிப்பு விகிதம் கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.
இந்திய மாணவர் அனுமதிப்பத்திர நிராகரிப்பு விகிதம் அதிகரித்துள்ள நேரம், இந்தியா மற்றும் கனடா இடையிலான தூதரக உறவுகளில் விரிசல் நிலை நீடித்து வருகின்றது.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 2023ல் கனடாவில் நடந்த ஒரு சிக்ஹ் சமூகத் தலைவரின் கொலைக்கு இந்திய அரசே சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்தியா இந்தக் குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டில், கனடா அதிகாரிகள் சுமார் 1,550 போலி சேர்க்கை கடிதங்கள் (fake admission letters) அடங்கிய மாணவர் அனுமதிப்பத்திர விண்ணப்பங்களை கண்டுபிடித்தனர் — பெரும்பாலானவை இந்தியாவிலிருந்து வந்தவை என கூறப்பட்டது.
அதன்பின், கனடா விசா பரிசோதனை முறைமையை வலுப்படுத்தி, விண்ணப்பதாரர்களுக்கான பொருளாதார ஆதாரங்களின் தேவைகளை அதிகரித்துள்ளது.
மாணவர் அனுமதிப்பத்திரங்களை வழங்குவது கனடாவின் உரிமையாக இருந்தாலும், “உலகில் சிறந்த தரமான மாணவர்கள் இந்தியாவிலிருந்தே வருகின்றனர் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கனடிய கல்வி நிறுவனங்கள் இவர்களின் திறமை மற்றும் கல்வித் திறனினால் பெரிதும் பலனடைந்துள்ளன,” என மேலும் தெரிவித்துள்ளது.