அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை நிராகரித்த FIFA!
கத்தார் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் வீடியோ மூலம் தோன்ற ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) விடுத்த கோரிக்கையை FIFA நிராகரித்துள்ளது.
கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி 18ஆம் திகதி லுஸைல் மைதானத்தில் நடக்க உள்ளது.
இதில் முன்னாள் சாம்பியன்களான அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் சர்வதேச நாடுகள் எதிர்பார்க்கும் முக்கிய போட்டியாக இது உள்ள நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீடியோ வாயிலாக தோன்ற முடிவு செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து, தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக ஆதரவை பெற உலகின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தோன்றியுள்ளார்.
கிராமி விருதுகள், கேன்ஸ் திரைப்பட விழா, 20 நாடுகளின் உச்சி மாநாடு உள்ளிட்ட பெரும் நிகழ்வுகளில் அவர் தோன்றி உரையாற்றினார்.
அந்த வகையில் தான் கத்தார் உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் தோன்ற அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை FIFA நிராகரித்துள்ளது. அதற்கான காரணத்தை FIFA இன்னும் தெரிவிக்கவில்லை.