பியர்சன் விமான நிலையத் தங்கக் கொள்ளை வழக்கு: முக்கியக் குற்றவாளி நீதிமன்றத்தில் சாட்சியம்
கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கக் கொள்ளைகளில் ஒன்றாகக் கருதப்படும் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையக் கொள்ளை வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முக்கிய நபர் ஒருவர், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரின் வழக்கு விசாரணையில் சாட்சியமளித்துள்ளார்.
இவ்வழக்கில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அர்சலான் சவுத்ரி என்பவருக்கு, கடந்த வசந்த காலத்தில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, 22 மில்லியன் டொலர் இழப்பீட்டைத் திரும்பச் செலுத்த 40 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையிலும், இவ்வழக்கில் தொடர்புடைய பர்ம்பால் சித்து என்பவரின் வழக்கு விசாரணையில் அர்சலான் இன்று சாட்சியம் அளித்துள்ளார்.

ஏப்ரல் 17, 2023 அன்று டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தின் சரக்குக் கிடங்கிலிருந்து 400 கிலோவிற்கும் அதிக எடைகொண்ட 6,600 தங்கக் கட்டிகளும், வெளிநாட்டுப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டன.
இதன் மதிப்பு 22 மில்லியன் கனடிய டாலர்களுக்கும் அதிகம். கொள்ளைச் சம்பவம் நடந்தபோது ஏர் கனடா நிறுவனத்தின் ஊழியராகப் பணியாற்றிய பர்ம்பால் சித்து, போலியாகத் தயாரிக்கப்பட்ட வான்வழிப் போக்குவரத்து ஆவணத்தை வழங்கியதன் மூலம், வேறொரு நபர் லாரியில் தங்கத்தை ஏற்றிச் செல்ல உதவியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பர்ம்பால் சித்து தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து, வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இவ்வழக்கின் விசாரணை ஒன்டாரியோவின் பிராம்ப்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நீதிமன்றத்தில் சாட்சியமளித்த அர்சலான் சவுத்ரி, "இந்தத் தங்கக் கொள்ளையின் திட்டமிடல் முழுவதுமே என்னுடையது தான்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.