தடுப்பூசி மறுப்பாளர்களிடம் வரி வசூலிக்கும் திட்டம்: கனேடிய மாகாணம் முடிவு
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் தடுப்பூசி மறுப்பாளர்களிடம் இருந்து அபராதமாக குறிப்பிட்ட நிதியை வசூலிக்க நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை மாகாண முதல்வர் François Legault செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார். இந்த அபராதமானது சுகாதார கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பங்களிப்பாக கருத வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இந்த அபராதத் தொகை எவ்வளவு என்பதை அவர் குறிப்பிட மறுத்துவிட்டார். மேலும், இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து மாகாண நிர்வாகம் நிதியமைச்சர் மற்றும் அதன் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி மறுப்பாளர்களிடம் இருந்து 50 அல்லது 100 டொலர் அபராதமாக வசூலிப்பது என்பது உண்மையில் போதுமானதாக இல்லை என்றே முன்னர் ஒருமுறை முதல்வர் François Legault குறிப்பிட்டிருந்தார்.
இதனால் இந்த அபராதத் தொகை அல்லது வரி குறிப்பிடத்தக்கவகையில் அதிகமாக இருக்கும் என்றே தெரியவந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் அமுலுக்கு கொண்டுவரப்படும் இந்த வரியானது, இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத தகுதியான அனைவரிடம் இருந்தும் வசூலிக்கப்படும்.
மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போடுவதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் இந்த கூடுதல் வரி செலுத்த தேவை இல்லை. ஆனால், தகுதி இருந்தும் தடுப்பூசி மறுப்பாளர்கள் கண்டிப்பாக வரி செலுத்த நேரிடும் என குறிப்பிட்டுள்ளார் முதல்வர் François Legault.
தடுப்பூசி மறுப்பாளர்களால் நமது சுகாதார கட்டமைப்பு கடும் அச்சுறுத்தலுக்கு இலக்காகி இருக்கிறது. இதனால் பாதிக்கப்படும் பெரும்பாலான மக்கள் கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு நாம் பதில் சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார் முதல்வர்.
கியூபெக் மாகாணத்தை பொறுத்தமட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 188 பேர்கள் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 2,742 பேர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி புதிதாக 62 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
இதனால் கியூபெக் மாகாணத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 12,000 என பதிவாகியுள்ளது.