ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம் ; இந்தியாவுக்கு பின்லாந்து வெளிவிவகார அமைச்சர் ஆதரவு
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐரோப்பிய நாடான பின்லாந்து ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின் ஒரு பகுதியாக பின்லாந்தில் நடைபெற்ற ‘குல்தரந்தா பேச்சுகள்’ மாநாட்டில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஐரோப்பாவிற்கு ஆபத்து விளைவிக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்தியா இதுவரை ஈடுபடவில்லை என்றும், சந்தை விலை மற்றும் கிடைப்பின் அடிப்படையிலேயே ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்தார்.

மேலும், சர்வதேச எண்ணெய் சந்தையை நிலைநிறுத்துவதற்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குமாறு அப்போது அமெரிக்கா கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு பின்லாந்து வெளியுறவு அமைச்சர் எலினா வால்டோனென் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பேசிய அவர், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின் மேற்கத்திய நாடுகள் விதித்த விலை உச்சவரம்புக்குள் இந்தியா செயல்பட்டதாக தெரிவித்தார்.
ரஷ்ய எண்ணெய் விற்பனை முழுமையாக நிறுத்தப்படுவதை விட, அதன் வருவாய் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த விலை உச்சவரம்பின் முக்கிய நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.
இந்தியா தனது தேவைக்காகவும், நிர்ணயிக்கப்பட்ட விலை வரம்புக்குள் இருந்தும் மட்டுமே கச்சா எண்ணெய் வாங்கியதாகவும், இதில் எந்தவிதமான உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என்றும் பின்லாந்து வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஐரோப்பிய தரப்பிலிருந்தும் ஆதரவு கருத்து வெளியாகியுள்ளது.