பிரித்தானியாவில் முதன்முறையாக mpox தொற்று
ஆப்பிரிக்காவில் காங்கோ குடியரசில் பரவிய mpox தொற்று, முதன்முறையாக பிரித்தானியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
mpox தொற்று பரவிவரும் நாடுகளில் ஒன்றில் பயணப்பட்டதாக கூறப்படும் பிரித்தானியர் ஒருவருக்கு தற்போது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து லண்டனின் ராயல் ஃப்ரீ மருத்துவமனையில் உள்ள உயர் பாதுகாப்பு தொற்று நோய் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 21 ஆம் திகதி விமானத்தில் பிரித்தானியா திரும்பிய பிறகு அந்த நபர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஒக்டோபர் 27 அன்று லண்டனில் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அந்த நபரைத் தொடர்பு கொண்டவர்களை சுகாதார அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பிரித்தானியாவில் mpox தொற்றின் இந்த வகையை உறுதி செய்வது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
மேலும், பிரித்தானியாவில் பொது மக்களுக்கான ஆபத்து குறைவு என்றும், பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிந்து, சாத்தியமான பரவலின் அபாயத்தைக் குறைக்க விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.
அதேவேளை 2022ல் உலகம் முழுக்க mpox தொற்று பரவ காரணமான clade II வகையை விடவும் தற்போது லண்டனில் உறுதி செய்யப்பட்டுள்ள clade Ib மிக ஆபத்தான வகை என கூறப்படுகிறது.