நேபாளத்தின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஐவரின் கடவுச்சீட்டு முடக்கம்
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி உள்ளிட்ட 5 பேரின் கடவுச்சீட்டு இடைக்கால அரசால் முடக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தினை விசாரிப்பதற்காக இடைக்கால அரசு ஆணைக்குழுவொன்றை நியமித்து தனது விசாரணையைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
முழுமையான விசாரணை
இந்நிலையில், விசாரணை ஆணைக்குழு அளித்த பரிந்துரையின் பேரில் நேற்று(28) பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால், நேபாளத்தின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட ஐவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணை முடியும் வரை அவர்கள் காத்மண்டு பள்ளத்தாக்கை விட்டு வெளியேற வேண்டுமென்றாலும் இடைக்கால அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஒருநாள் முன்பு பேசிய கே.பி. சர்மா ஒலி, போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த நான் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தானியங்கி ஆயுதங்கள் பொலிஸாரிடம் இல்லை.
இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், ஒலியின் இந்தக் கூற்றை பாதுகாப்புப் படை வட்டாரங்கள் மறுத்துள்ளன.
இதனிடையே, கே.பி. சர்மா ஒலி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களின் சட்டவிரோத சொத்துக்கள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்படும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.