ஈரானில் நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது
2023 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மனித உரிமைகள் ஆர்வலர் நர்கிஸ் முகமதியை ஈரான் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நார்வேயின் நோபல் குழு, இந்த சம்பவம் மிகவும் கவலையளிப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரானிய அதிகாரிகள் முகமதியின் இருப்பிடத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்து, நிபந்தனையின்றி அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நோபல் குழு வலியுறுத்தியுள்ளது.
தெஹ்ரானுக்கு 680 கி.மீ. தொலைவில் உள்ள மஹ்சத் நகரில், மர்மமான முறையில் இறந்த மனித உரிமை வழக்கறிஞர் ஒருவரின் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளை உள்ளூர் நிர்வாகம் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியிருந்தாலும், கைது செய்யப்பட்டவர் முகமதிதானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.