அமெரிக்காவில் 5 வயது சிறுவன் கைது ; ட்ரம்பின் அடக்குமுறையால் அதிகரிக்கும் அடாவடி
டொனால்ட் ட்ரம்ப் ஆளுகையின் கீழ் அமெரிக்காவில் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் மீது கடுமையான அடக்குமுறை இருந்து வருகிறது. கடந்த ஜனவரி 7 ஆம் திகதி, சிற்றூர்ந்தை விட்டு இறங்க மறுத்ததாக 37 வயதான ரெனி நிக்கோல் குட் என்ற பெண் ICE அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது 5 வயது சிறுவனை ICE அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு கடத்த உத்தரவு
மினசோட்டாவின் கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் தனது தந்தையுடன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 'லியாம் ரமோஸ்' (Liam Ramos) எனும் 5 வயது சிறுவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பாடசாலையில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் அச்சிறுவனை அவனது வீட்டு வாசலுக்கு அழைத்துச் சென்று, கதவைத் தட்டச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
வீட்டிற்குள் வேறு யாராவது இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அச்சிறுவனை அதிகாரிகள் 'தூண்டிலாக' பயன்படுத்தியதாக அந்தப் பாடசாலை மாவட்டத்தின் கண்காணிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
தடுத்து வைக்கப்பட்ட சிறுவனும் அவனது தந்தையும் உடனடியாக டெக்சாஸில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குறித்த குடும்பத்தினர் தஞ்சம் கோரி முறைப்படி விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களை நாடு கடத்த உத்தரவு எதுவும் இல்லாத போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அதே பாடசாலை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் இவ்வாறான சோதனைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன், பாடசாலைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பொலிஸாரின் இந்த நடவடிக்கை மனிதநேயமற்றது எனப் பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமது இலக்கு சிறுவன் அல்ல, அவனது தந்தையே என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.