ட்ரம்பின் சமாதான குழுவிலிருந்து கனடா நீக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சமதான சபையிலிருந்து கனடா நீக்கப்பட்டுள்ளது.
உலகில் இதுவரை அமைக்கப்பட்ட மிக உயரிய தலைவர்கள் குழு” என அவர் வர்ணித்த சமாதான சபையிலிருந்து கனடா நீக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியின் எதிர்காலத்தை மேற்பார்வை செய்யும் நோக்கில் இந்தக் குழு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னியை அந்தக் குழுவில் சேர அழைத்திருந்த அழைப்பை டிரம்ப் பின்னர் ரத்து செய்துள்ளார்.

ஆரம்பத்தில், கார்னி கொள்கை ரீதியாக அந்த அழைப்பை ஏற்றிருந்தார்.
ஆனால் வியாழக்கிழமை, தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், கனடா இனி அந்த “மிக மதிப்புமிக்க தலைவர்கள் குழுவில்” சேர அழைக்கப்படாது என டிரம்ப் அறிவித்தார்.
பிரதமர் கார்னி அண்மையில் சுவிட்சர்லாந்தில் உலகளவில் கவனம் ஈர்த்த உரையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த உரையில், விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கில் “பிளவு” ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்திருந்தார்.
மேலும், உலகின் பெரும் சக்திகளின் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்ள, நடுத்தர சக்தி நாடுகள் இணைந்து செயல்பட்டு, “விளைவுகளைக் கொண்ட மூன்றாவது பாதையை” உருவாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த விவகாரத்தில், கனடா அரசு அழைப்பு ரத்து செய்யப்பட்ட தகவலை சமூக ஊடகங்கள் வழியாக அறிந்ததா அல்லது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதா என்பது குறித்து பிரதமர் அலுவலகம் கருத்து தெரிவிக்கவில்லை.