அமெரிக்காவுக்கு உளவு பார்த்த 30 பேர் ஈரானில் கைது
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்காக உளவு பார்த்தமை, அவற்றுடன் இணைந்து செயற்பட்டமை மற்றும் தற்கொலைப்படை முகவர்களாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த சில நாட்களில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் புலனாய்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தஸ்நிம் (Tasnim) செய்தி நிறுவனத்தை மேற்போள் காட்டி அல்ஜெஸீரா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் ஈரானின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை இரண்டு "வளைகுடா நாடுகளின் அரசாங்கங்களுக்கு" வழங்கியதாகவும், பின்னர் அந்த நாடுகள் அத்தகவல்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஏனையவர்களில் 19 பேர் இஸ்ரேலுடன் தொடர்புகளைப் பேணி, அரசுக்கு எதிரான சக்திகளுடன் இணைந்து செயற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் களப் பணியாளர்கள் என விபரிக்கப்பட்டுள்ளனர்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உள்நாட்டிற்குள் இவ்வாறான உளவு நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.