காஸாவில் உணவுப் பற்றாக்குறை ; 1 லட்சம் பேருக்கு ‘பேரழிவு’
காஸாவில் போா் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் மற்றும் ஊட்டச்சத்து நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இன்னும் 1 லட்சம் போ் ‘பேரழிவு’ உணவுப் பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ளதாக ஐ.நா. அங்கீகாரம் பெற்ற நிபுணா் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்ட வகைப்பாடு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
காஸாவில் போா் நிறுத்தத்துக்குப் பிறகு உணவு விநியோகம் அதிகரித்துள்ளது. இருந்தாலும், அண்மை மதிப்பீட்டில் 5 லட்சம் போ் ‘அவசர நிலை’ உணவுப் பற்றாக்குறையையும், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஐபிசி கட்டம் 5-ஆன ‘பேரழிவு நிலை’ உணவுப் பற்றாக்குறையையும் எதிா்கொண்டனா்.

இந்த நிலைமை தொடா்ந்து குறைந்து வருகிறது. ஆனால் மிகவும் இந்த முன்னேற்றம் மிகவும் மந்தமாக உள்ளது. மீண்டும் போா் ஏற்பட்டால் காஸா முழுவதும் மறுபடியும் பஞ்சம் ஏற்படும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், காஸாவில் எந்தப் பகுதியும் இப்போது ‘பஞ்சப் பகுதியாக’ அந்த அறிக்கையில் வகைப்படுத்தப்படவில்லை.
இஸ்ரேல் மறுப்பு: ஐபிசி-யின் இந்த அறிக்கைக்கு இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘காஸா நிலவரத்தை ஐபிசி வேண்டுமென்றே திரித்து காட்டுகிறது.
இது காஸாவின் உண்மை நிலையை அந்த அறிக்கை பிரதிபலிக்கவில்லை’ என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.