சீன வாகனங்களுக்கான வரி குறைக்கப்படக் கூடாது – டர்க் போர்ட்
சீன வாகனங்களுக்கான வரி குறைக்கப்படக்கூடாது என ஒன்ராரியோ முதல்வர் டக் ஃபோர்ட் வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு (EV) விதிக்கப்பட்டுள்ள 100% வரியை தொடர வேண்டும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் அவர் கோரியுள்ளார்.
இந்த வரி விதிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் மீளாய்வு செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கோரியுள்ளார்.
வரி நீக்கம் குறித்து கவனம் செலுத்தப்படுவதாக விவசாய அமைச்சர் ஹீத் மெக்டொனால்ட் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
சீனா கனோலா போன்ற உள்நாட்டு பயிர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தும் பட்சத்தில் இந்த வரியை நீக்குவதற்கு கனடியர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
நானோஸ் ரிசர்ச் நடத்திய கருத்துக் கணிப்பில் 62% கனேடியர்கள் இவ்வாறு தங்களது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை, கனடாவில் மின்சார வாகன விற்பனை 39.2% வீழ்ச்சி கண்டுள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
2020 முதல் 46 பில்லியன் கனேடிய டாலர் மதிப்பிலான ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி விநியோக சங்கிலி முதலீடுகளை இந்த வரி பாதுகாத்து வருவதாகவும், அதை நீக்குவது ஒன்ராரியோவில் உள்ள 1,57,000 நேரடி வேலைகளையும், நாட்டளவில் உள்ள நூற்றுக்கணக்கான ஆயிரம் மறைமுக வேலை வாய்ப்புகளையும் ஆபத்தில் ஆழ்த்தும் என ஃபோர்ட் தனது புதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.