வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடுவோருக்கு முக்கிய அறிவிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கோரி மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சமீப காலமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பல மோசடி சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரித்துள்ளார்.
பணம் வசூலித்த சம்பவம்
மோசடி நடவடிக்கை குறித்து அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அநுராதபுரத்தை அண்மித்த விகாரையின் விகாராதிபதி உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை வழங்குவதாக பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பணம் பெறும் மோசடிகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கமாறும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
வெளிநாட்டு வேலைகளை வழங்குவதாக கூறி சட்டவிரோதமான முறையில் பணத்தை பெற்றுக்கொள்ளும் ஆட்கடத்தல்காரர்களை கைது செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவிற்கும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு சகல வசதிகளையும் வழங்குமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளார்.