கனடா வருமான முகவர் நிலைய முன்னாள் ஊழியருக்கு சிறைத் தண்டனை
நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட கனடா வருவாய் முகவர் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், தனது தண்டனைக் காலத்தைச் சமூகத்திற்குள்ளேயே (வீட்டுக் காவல் மற்றும் கண்காணிப்பின் கீழ்) அனுபவிப்பார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரி செலுத்துவோரின் தனிப்பட்ட தகவல்களை ஊழியர் ஒருவர் தவறாகப் பயன்படுத்தியதாக கனடா வருவாய் முகவர் நிலையம் அளித்த புகாரைத் தொடர்ந்து, பொலிஸார் 2022 ஆம் ஆண்டு முதல் யோவான் சோலா என்பவர் குறித்து விரிவான விசாரணை நடத்தி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, 2026 ஜனவரி மாதம் வான்கூவர் நகரில் கைது செய்யப்பட்ட சோலா மீது நம்பிக்கை துரோகம், அடையாளத் தகவல்களைக் கடத்துதல், அடையாளத் திருட்டு, 5,000 டொலர்களுக்கும் குறைவான மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் குற்றச்செயல் மூலம் பெறப்பட்ட கடன் அட்டையைப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விசாரணையின் போது, நம்பிக்கை துரோகம், மோசடி மற்றும் அடையாளத் தகவல்களைக் கடத்துதல் ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை சோலா ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் மீதான ஏனைய குற்றச்சாட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த நவம்பர் 10 ஆம் திகதி அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இதன்படி, நம்பிக்கை துரோகம் மற்றும் அடையாளத் தகவல் கடத்தல் குற்றங்களுக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் குறைவான நிபந்தனை சிறைத் தண்டனையும், மோசடி குற்றத்திற்காக ஏககாலத்தில் அனுபவிக்கக்கூடிய இரண்டு மாத நிபந்தனை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் கண்காணிப்பு உத்தரவுகளை முறையாகப் பின்பற்றும் பட்சத்தில், அவர் சிறைக்குச் செல்லாமல் சமூகத்திற்குள்ளேயே இந்தத் தண்டனைக் காலத்தைக் கழிப்பார்.
மத்திய பொலிஸ் பசிபிக் பிராந்தியத்தின் இணைய மற்றும் நிதி விசாரணைப் பிரிவின் அதிகாரியான ஸ்டாஃப் சார்ஜென்ட் டேவிட் கிரே (David Grey) இது குறித்துக் கூறுகையில், பொதுமக்களின் முக்கிய தனிப்பட்ட தகவல்களை அணுகும் அதிகாரம் கொண்ட அரசு நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மீது கனேடிய மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை சோலாவின் இத்தகைய செயல்கள் சிதைத்துவிட்டதாகத் தெரிவித்தார்.