முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்
இலங்கையின் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை (30) காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானார்.
1943ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி பிலியந்தலையில் பிறந்த காமினி லொக்குகே, பிலியந்தலை மத்திய கல்லூரியில் தனது கல்வியைத் தொடர்ந்தார். 1960 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாகத் தனது அரசியல் பிரவேசத்தை அவர் ஆரம்பித்தார்.
பல ஆண்டுகால அரசியல்
1983 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியை ஈட்டிய காமினி லொக்குகே முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினராகச் செயற்பட்ட காமினி லொக்குகே இறக்கும்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராகச் செயற்பட்டார்.
பல ஆண்டுகால அரசியல் அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதியான காமினி லொக்குகே, விளையாட்டுத்துறை, நகர அபிவிருத்தி, வலுசக்தி, போக்குவரத்துத்துறை போன்ற துறைகளில் அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.
அவர் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராகப் பல தடவைகள் தேசிய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது