இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான இம்ரான் கானின் சுகாதாரம் மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பில், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் குழுவொன்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.
இம்ரான் கானை மருத்துவமனையில் அனுமதித்து, அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் மற்றும் அவரது சகோதரியான மருத்துவர் உஸ்மா கான் உள்ளிட்ட மருத்துவக் குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இம்ரான் கான் சில மணிநேரங்கள் மட்டுமே மருத்துவமனையில் வைக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானின் மருத்துவ சிகிச்சை தொடர்பில் மூன்று முக்கிய கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
அதன்படி, அவரது வலது கண் பார்வை இழப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட மருத்துவக் குழுவின் மூலம் சுயாதீன மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
மேலும், இம்ரான் கானின் குடும்பத்தினருக்கான வாராந்த சந்திப்புகள் தடையின்றி அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகள் எவ்வித தாமதமும் இன்றி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளாக அல்லாமல், முன்னாள் சக வீரர்களாகவும் கிரிக்கெட் போட்டியாளர்களாகவும் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக முன்னாள் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் உள்நாட்டு சட்ட நடைமுறைகளில் தலையிடும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையில் இலங்கையின் முன்னாள் உலகக் கிண்ணத் தலைவர் அர்ஜுன ரணதுங்கவுடன் இந்தியாவின் முன்னாள் தலைவர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அவுஸ்திரேலியாவின் ஆலன் போடர், ஸ்டீவ் வோ, கிரெக் செப்பல், இங்கிலாந்தின் அலஸ்டயர் குக், ஆடம் கில்கிறிஸ்ட், நாசர் ஹுசைன் மற்றும் டேவிட் கோவர் உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இம்ரான் கானின் கண் பாதிப்பு மற்றும் சிறையில் அவருக்கு போதிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமரிடம் முன்னாள் கிரிக்கெட் தலைவர்கள் விடுக்கும் இரண்டாவது முறையீடு இதுவாகும்.