இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி மீது வழக்கு பதிவு
இலஞ்ச ஊழல் குற்றச் சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி மூன் ஜே- இன் (Moon Jae-in) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் 2017 -2022 வரை ஜனாதிபதியாகப் பதவி வகித்த மூன் ஜே ன் தனது ஆட்சி காலத்தில் விமான நிறுவனம் ஒன்றிடமிருந்து தன் மருமகன் வாயிலாக 1,50,000 அமெரிக்க டொலர்களை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டிலேயே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் ஈஸ்டர் ஜெட் என்ற விமான நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு தாய்லாந்து முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியுடன், தாய் ஈஸ்டர் ஜெட் என்ற பெயரில் விமான சேவையை ஆரம்பிக்கத் திட்டமிட்டது.
அதன் பின் கொரோனா தொற்று காரணமாக, அந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி பட்ஜெட் விமான சேவை திட்டத்தை கைவிட்டது.
இந்த நிறுவனத்தில் 2018 முதல் 2020 வரை தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி மூனின் மருமகன் பல லட்ச ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.
அவருக்கு விமான தொழிலில் எந்த முன் அனுபவமும் இல்லை என்றும், லஞ்ச பணத்தை முன்னாள் ஜனாதிபதி மூன், அவரது மருமகனின் பெயரில் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மூன் ஜே இன் மீதான லஞ்ச வழக்கு அவரது கட்சியான ஜனநாயக அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.