புற்றுநோய் அபாயகட்டத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனைத் தாக்கியுள்ள கொடிய புற்றுநோய், தற்போது அவரின் எலும்புகளையும் தாண்டி உடலின் பிற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவி வருவதாக அவரது மகன் அண்டர் பைடன் (Hunter Biden) மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பிபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பேசிய அண்டர் பைடன், தனது தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதை வெளிப்படுத்தினார். "புற்றுநோய் அவரது எலும்புகள் மற்றும் அதற்கும் அப்பால் பரவிவிட்டது.

மிகவும் கடினமாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது
இது அவருக்குக் கடுமையான வலியையும், பல வகைகளில் உடல் தளர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது" எனக் கூறிய அவர், தனது தந்தையின் தற்போதைய நிலையைப் பார்ப்பது "உண்மையிலேயே மிகவும் கடினமாகவும், பெருந்துயரமாகவும் உள்ளது" கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.
83 அகவையுடைய மக்களாட்சிக் கட்சியின் தலைவரான ஜோ பைடன், 2021 முதல் 2025 வரை அமெரிக்காவின் 46-வது அதிபராகப் பணியாற்றினார். அவரது உடல்நலம் குறித்த பல்வேறு ஐயங்கள் எழுந்ததால், 2024-ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
அவருக்குப் பதிலாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் , குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்பிடம் தோற்றார். வெள்ளை மாளிகையிலிருந்து விடைபெற்று நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் தனக்கு முன்னிற்குஞ்சுரப்பிப் புற்றுநோய் (Prostate cancer) இருப்பதை ஜோ பைடன் உலகிற்கு அறிவித்தார்.
தொடரும் மருத்துவப் போராட்டங்கள்அதன்பின்னர் கதிர்வீச்சு மருத்துவம் மற்றும் இயக்குநீர் மருத்துவக் (Hormone therapy) கட்டமைப்புக்குள் அவர் உட்படுத்தப்பட்டார்.
கடந்த மாதம் கூட, தனது பணிக்காலம் குறித்த புதிய நூல் ஒன்றின் வெளியீட்டு அறிவிப்பின்போது, தனது மருத்துவம் "மிகவும் நன்றாக" சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். ஆனால், நோயின் வீரியம் தற்போது கட்டற்ற நிலையை எட்டியுள்ளதை அண்டர் பைடனின் சொற்கள் உறுதிப்படுத்துகின்றன