குறைந்து வரும் பிறப்பு; பிரான்ஸ் வழங்கும் சலுகை!
குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், குடும்பங்கள் சொந்த வீடு வாங்க உதவவும், வட்டியில்லா வீட்டுக் கடன் திட்டமான PTZ-ஐ விரிவுபடுத்த செனட் சபை முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன.
2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, ஒவ்வொரு புதிய குழந்தை பிறக்கும்போதும் குடும்பங்கள் PTZ கடன் பெற அனுமதிக்கும் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஏற்கெனவே குழந்தையை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கும், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் குடும்பங்களுக்கும் இந்தச் சலுகை வழங்க முன்மொழியப்பட்டிருந்தது.
2025ஆம் ஆண்டு பிரான்சில் 6,45,000 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இது 2024ஆம் ஆண்டைவிட 2.1% குறைவு 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 24% குறைவாகும். இதனால் குடும்பங்களுக்கு வீடு வாங்குவதில் உதவுவது பிறப்பு விகிதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
ஆனால், ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் கடன் வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் போதுமான வருமானம் கொண்ட குடும்பங்களும் சலுகையைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்று அமைச்சர் டேவிட் அமியல் எச்சரித்துள்ளார்.
மேலும், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், வீட்டு விலையும் வாடகையும் அதிகமாக உள்ள நகர்ப்புறங்களில் பழைய வீடுகளை வாங்குவதற்கும் PTZ கடன் வழங்க வேண்டும் என்று செனட் சபை முடிவு செய்துள்ளது.
இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகப் பெரிய நகரங்களுக்குச் சென்றாலும், அதிகமான வீட்டு விலைகள் காரணமாகச் சொந்த வீடு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செனட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
PTZ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் 44,000 ஆக இருந்தது; 2025ஆம் ஆண்டில் சுமார் 73,000 ஆக அதிகரித்துள்ளது.
இருப்பினும், பழைய வீடுகளை வாங்குவதற்கான வருமான வரம்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிபந்தனைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். செனட் சபையின் இந்த முடிவுகள் இறுதியாகச் சட்டமாகி நடைமுறைக்கு வந்த பின்னரே குடும்பங்களும் இளைஞர்களும் இந்தப் புதிய சலுகைகளைப் பயன்படுத்த முடியும்