மக்கள் கூட்டத்தை கண்காணிக்க பிரெஞ்சு பொலிசாருக்கு விசேட அனுமதி
மக்கள் கூட்டம் கண்காணிப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை முன்னெடுக்கும் பொருட்டு கமெரா பொருத்தப்பட்ட ட்ரோன்களை பயன்படுத்த பிரெஞ்சு பொலிசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் இந்த விதி அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி மேக்ரானின் ஓய்வூதிய சீர்திருத்தம் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதுடன், நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் கலவரமாக வெடித்த நிலையிலேயே பொலிசாருக்கு ட்ரோன்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் அல்லது பொது சொத்துக்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க ட்ரோன்களைப் பயன்படுத்த காவல்துறை, சுங்கத்துறை அல்லது இராணுவத்திற்கு அனுமதி அளிப்பதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்கும், போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதற்கும், எல்லைக் கண்காணிப்பு மற்றும் மக்களை மீட்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.