டொராண்டோவில் 'நோரோவைரஸ்' அச்சுறுத்தல்
கனடாவின் டொராண்டோ நகரிலுள்ள பிரபல 'சமர்ஹில் மார்க்கெட்' விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட உறைவிக்கப்பட்ட ராஸ்ப்பெர்ரி தயாரிப்புகள் சிலவற்றில் 'நோரோவைரஸ்' கிருமித்தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவை சந்தையிலிருந்து மீளப்பெறப்பட்டு வருகின்றன.
கனடிய உணவு ஆய்வு முகவர் நிறுவனம் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. சமர்ஹில் மார்க்கெட் பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்பட்ட உறைவிக்கப்பட்ட ராஸ்ப்பெர்ரி பழங்கள், கலப்புப் பழங்கள், ஸ்மூத்தி கலவை மற்றும் ராஸ்ப்பெர்ரி புரோட்டீன் பவுடர் ஆகியவை இப்பட்டியலில் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது.
டொராண்டோ மற்றும் ஒன்டாரியோவின் அரோரா பகுதிகளிலுள்ள சமர்ஹில் மார்க்கெட்டின் கிளைகளில் கடந்த ஜூலை 29 முதல் செப்டம்பர் 15 வரை விற்பனை செய்யப்பட்ட பொருட்களுக்கே இந்த எச்சரிக்கை பொருந்தும்.

உணவு மூலம் பரவும் நோய் வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றொரு விசாரணையைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் 'அலாஸ்கோ' பிராண்டின் உறைவிக்கப்பட்ட ராஸ்ப்பெர்ரிகளும் இதே காரணத்திற்காகத் திரும்பப்பெறப்பட்டிருந்தன.
குறிப்பிட்ட பொருட்களை நுகர்வதைத் தவிர்க்குமாறும், ஏற்கனவே வாங்கியிருப்பின் அவற்றை எறிந்துவிடுமாறு அல்லது வாங்கிய இடத்திலேயே கொண்டு சென்று ஒப்படைக்குமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எனினும், சமர்ஹில் மார்க்கெட் பொருட்களினால் இதுவரை எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நோரோவைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்றுப்பிடிப்பு போன்ற அறிகுறிகள் தோன்றும். மேலும் லேசான காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் சோர்வு போன்றவையும் ஏற்படக்கூடும். பெரும்பாலான மக்கள் சில நாட்களில் இதிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.