சர்வதேச சந்தையில் டீசல் தட்டுப்பாடு ; அமெரிக்காவின் அதிரடி முடிவால் உச்சமடையும் எரிபொருள் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கடுமையான டீசல் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து மேற்கொள்ளப்படும் டீசல் ஏற்றுமதிக்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் கையிருப்பில் உள்ள அவசரகால டீசல் இருப்புகளை சந்தைக்கு விடுவிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுக்கத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க விவசாயிகள், சாரதிகள் மற்றும் வர்த்தகர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தச் சுமையை அமெரிக்க மக்கள் மீது மாத்திரம் சுமத்தாமல், ஐரோப்பிய நாடுகள் தங்களிடமுள்ள டீசல் கையிருப்புகளை உடனடியாக சந்தைக்கு விடுவிக்க வேண்டும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானுடனான போரினால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியின் பின்னணியில், அமெரிக்காவில் டீசல் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க மக்களின் முக்கிய கவலைகளில் ஒன்றாக மாறியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா நாளொன்றுக்கு சுமார் 1.2 முதல் 1.5 மில்லியன் பீப்பாய்கள் டீசலை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாகும்.
இந்த நிலையில், அமெரிக்கா டீசல் ஏற்றுமதிக்கு தடை விதித்தால், உலகின் ஏனைய நாடுகளில் டீசல் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.