கனடாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட இந்திய குற்றவாளி அமெரிக்காவில் கைது
கொலைக்குற்றம் ஒன்று தொடர்பில் இந்தியாவில் தேடப்பட்டுவரும் ஒருவர் கனடா அமெரிக்க எல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஷாத் குமார் (22) என்னும் இந்தியர், இந்தியாவில் கொலைக்குற்றம் ஒன்று தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்டுவருகிறார்.
ஞாயிற்றுக்கிழமையன்று, தனது அடையாளத்தை மறைத்து, போலியான பெயர் மற்றும் பிறந்த திகதியுடன், நியூயார்க்கையும் ஒன்ராறியோவையும் இணைக்கும் Peace Bridge என்னும் பாலம் வழியாக கனடாவுக்குள் நுழைய முயன்றிருக்கிறார் விஷாத்.
Supplied
ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்படவே, மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப முயன்ற விஷாத்தை அமெரிக்க அதிகாரிகள் விசாரிக்க, அவர் கொலைக்குற்றம் ஒன்றிற்காக இந்திய பொலிசாரால் தேடப்பட்டுவரும் நபர் என தெரியவந்துள்ளது.
அவரைக் கைது செய்ய இன்டர்போல் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையில், அமெரிக்க பொலிசார் விஷாத்தைக் கைது செய்துள்ளார்கள்.
2024ஆம் ஆண்டு, விஷாத் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த நிலையில், தற்போது அங்கிருந்து கனடாவுக்குள் நுழைய முயன்றபோது கனடா அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுக்க, அமெரிக்க பொலிசாரிடம் சிக்கிக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.