அமெரிக்காவை புகழ்ந்து பாராட்டிய கனடிய பிரதமர்
இனி ஒரு நாடோ அல்லது ஒரு சர்வதேச அமைப்போ மட்டும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கும் காலம் முடிவடைந்து வருவதாகவும் கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி, உருவாகி வரும் புதிய உலக ஒழுங்கில் அமெரிக்கா முக்கிய பங்காற்றும் என குறிப்பிட்டுள்ளார்.
அயர்லாந்து பயணத்தின் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், திங்கட்கிழமை பிரான்சின் எவியான்-லே-பேன் நகரில் ஆரம்பமாகவுள்ள ஜி7 உச்சி மாநாடு புதிய உலக ஒழுங்கிற்கான அடித்தளத்தை அமைக்கக்கூடும் என்றார்.
செயற்கை நுண்ணறிவு (AI) ஒழுங்குமுறை, குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் சில நாடுகள் ஒரே நிலைப்பாட்டில் செயல்படும் என்றும், மற்ற சில நாடுகள் தலையீடு குறைந்த சுதந்திரமான அணுகுமுறையை பின்பற்றக்கூடும் என்றும் கார்னி குறிப்பிட்டார்.
மேலும், ஜி7 மாநாட்டில் கனடாவின் அணுகுமுறை ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஏற்ப மாறுபடும் தற்காலிக கூட்டணிகளை உருவாக்குவதாக இருக்கும் என்றும், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட புதிய கூட்டாளிகளை கனடா எதிர்பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஈரானில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்த ஆண்டு ஜி7 மாநாட்டில் புவிசார் அரசியல் விவகாரங்கள் முக்கிய இடம் பெறும் என தெரிவித்துள்ளார்.
போரை நிறுத்தி உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதே சரியான நெறிமுறைத் தீர்வாக இருக்கும் என்றும் மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.