கருங்கடல் கடற்பரப்பில் மூழ்கிய எரிவாயுக் கப்பல் ; 19 பணியாளர்களும் பத்திரமாக மீட்பு
கருங்கடலில் உள்ள பல்கேரியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் பயணித்த எரிவாயுக் கப்பலொன்று இன்று (17) மூழ்கியுள்ளது.
எகிப்திலிருந்து ருமேனியா நோக்கிப் பயணித்த லைபீரியக் கொடியுடன் கூடிய 'GAS HUSKY' என்ற குறித்த திரவப் பெற்றோலிய வாயு (LPG) கப்பலில், சுமார் 3,400 மெட்ரிக் தொன் புரோப்பேன் எரிவாயு ஏற்றப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கப்பல் நள்ளிரவுக்குப் பின்னர் ரெடார் கண்காணிப்பிலிருந்து மறைந்த நிலையில், இன்று காலை 8.02 மணியளவில் கப்பலிலிருந்து அவசர எச்சரிக்கை சமிக்ஞை வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பல்கேரிய பாதுகாப்புப் படையினர் வானூர்திகள் மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் உடனடியாகத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது, கப்பலில் இருந்த 19 பிலிப்பைன்ஸ் பணியாளர்களும் உயிர்காப்புப் படகில் தஞ்சமடைந்திருந்த நிலையில், உலங்கு வானூர்திகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் கப்பல் ஆளில்லா ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இதேவேளை, நேற்றைய தினமும் பல்கேரிய கடற்பரப்பில் கோதுமை ஏற்றிச் சென்ற மற்றுமொரு கப்பல் மூழ்கியிருந்த நிலையில், அதிலிருந்த 12 பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.