21 ஆயிரத்தை நெருங்கிய காஸா மரணம்; சோகத்தில் உலகநாடுகள்
இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கடந்த திங்களன்று கூறிய தகவலில் காஸா பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 241 போ் உயிரிழந்ததுடன் 382 போ் காயமடைந்தனா்.
இரு மாதங்களை கடந்தும் தொடரும் போர்
கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 20,915-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 54,918-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் ஹமாஸ் அமைப்பினா், அந்த நாட்டுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.
அந்த மோதலின் உச்சக்கட்டமாக, இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7 ஆம் திகதி சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினா் 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா்.
மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை பிணைக் கைதிகளாக அவா்கள் பிடித்துச் சென்றனா். அதயைடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் ஈவிரக்கமின்றி கொல்லபப்ட்டுவரும் நிலையில், போரை நிறுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.