உலகிலேயே அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நாட்டில் திடீர் உத்தரவு
ஜிப்ரால்டர் நாட்டில் தகுதியுடைய மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்ரால்டர் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தனியாக விருந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவதையும் நான்கு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திலேயே ஜிப்ரால்டர் அரசாங்கம் குறித்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொடுதல் மற்றும் ஆரத்தழுவுதல் உள்ளிட்டவைகளும் தவிர்க்க கோரப்பட்டுள்ளது. மேலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி திடீரென்று அதிக எண்ணிக்கையிலான மக்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே ஜிப்ரால்டர் அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.
ஸ்பெயினுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஜிப்ரால்டர் நாட்டில், கடந்த ஏழு நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 56 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது செப்டம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு 10க்கும் குறைவாக இருந்தது. ஜிப்ரால்டர் உலகிலேயே அதிக தடுப்பூசி விகிதத்தைக் கொண்டிருந்தாலும், இந்த அதிவேக பாதிப்பு எண்ணிக்கையானது அதிகாரிகளை குழப்பமடைய செய்துள்ளது.
ஜிப்ரால்டரில் தகுதியுடைய அனைத்து மக்களுக்கும் மார்ச் முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் கடைகளிலும் பொதுப் போக்குவரத்திலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிக்கான நடவடிக்கைகளை ஜிப்ரால்டர் நிர்வாகம் முன்னெடுத்து வருகிறது.