முன்று குழந்தைகளின் தாயை 143 முறை குத்தி கொலை செய்த 13 வயது சிறுமி
இங்கிலாந்தில், ஒரு 13 வயது மாணவி, மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை 143 முறை கத்தியால் குத்தி கொலை செய்த பின்னர், தடயங்களை மறைக்க அவரது வீட்டில் தீ வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மார்ச் மாதம் நார்தாம்டன்ஷையரில் உள்ள வெல்லிங்பரோவில் உள்ள ஒரு வீட்டில் 43 வயதான மார்டா பெட்னார்க்ஸிக் (Marta Bednarczyk) என்பவரின் உடல் தீக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

மோசமான மனநலத்தால் ஏற்பட்டவை அல்ல
பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, மார்டா உடலில் குறைந்தது 143 கூர்மையான காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதில் 65 காயங்கள் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்துள்ளன. இது ஒன்றுக்கும் மேற்பட்ட கத்திகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு கத்தி காயம் அவரது மூளைக்குள் சென்றிருந்தது, மேலும் இரண்டு காயங்கள் நுரையீரலைப் பாதித்திருந்தன.
மண்டை ஓட்டைத் துளைக்கும் அளவுக்குக் குத்துவதற்கு கடுமையான விசை தேவைப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த 13 வயதுச் சிறுமி, மார்டாவை சட்டவிரோதமாகக் கொன்றதை ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், ‘குறைக்கப்பட்ட பொறுப்பு’ (diminished responsibility) என்ற காரணத்தைக் கூறி, கொலை (Murder) குற்றத்தை மறுக்கிறார். சிறுமியின் குறைக்கப்பட்ட பொறுப்பு என்ற வாதத்தை அரசுத் தரப்பு ஏற்க மறுக்கிறது.
இது திட்டமிட்டக் கொலை என்றும், சிறுமி தீவிரமான தீங்கு விளைவிக்கவே இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்றும் வழக்குரைஞர் ஸ்கின்னர் வாதிட்டார். சிறுமி இந்தக் கொலை தொடர்பாகப் பொய் கூறியுள்ளார் என்றும், கொலைக்கு முன் அவர் இணையத்தில் மேற்கொண்ட தேடல்களும் (research) இந்தச் செயலைத் திட்டமிட்டுக் செய்ததைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கொலையானது அவரது மனநலக்குறைவால் ஏற்பட்டதல்ல, இது திட்டமிட்ட கொலை என்று அரசுத் தரப்பு உறுதியாகக் கூறியது.
மனநல மருத்துவத் துறையில் உள்ள நிபுணர்கள், அவரது செயல்கள் மோசமான மனநலத்தால் ஏற்பட்டவை அல்ல என்று கூறியுள்ளதையும் வழக்குரைஞர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் கொலைக்கான நோக்கமும், குறைக்கப்பட்ட பொறுப்பு என்ற பாதுகாப்பு வாதமும் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.