விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன்; பிரிட்டன் மன்னர் சார்லஸ்
புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைந்துவிடும். நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்' என பிரிட்டன் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின், 2022ம் ஆண்டு, செப்டம்பரில், பிரிட்டன் மன்னராக, அவரது மகன் மூன்றாம் சார்லஸ், 77, முடிசூட்டிக் கொண்டார்.

உடல்நலக்குறைவு
இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சார்லசுக்கு, புற்றுநோய் கண்டறியப்பட்டது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சூழலில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் கூறியதாவது: புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அந்நோய் பாதிப்பிலிருந்து எளிதாக மீள்வதற்கு உதவுகிறது.
புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைந்துவிடும். நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். புற்றுநோய் பாதிப்பை விரைவாக அறிந்து, சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.
தொடக்கத்திலேயே புற்றுநோயை கண்டறிவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை நான் நேரடியாக பெற்றுள்ளேன். சரியான நேரத்தில் நோயை கண்டறிந்ததால்தான், இன்று நான் சிகிச்சையில் இருக்கும்போதும்கூட சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்.
புற்றுநோயியல் நிபுணர்கள், செவிலியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்களின் தன்னலமற்ற பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். இவ்வாறு மன்னர் சார்லஸ் கூறியுள்ளார்.