சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் அதிரடி கைது
பூர்வகுடி மக்களின் உரிமைக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரபல சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்வே நாட்டில் நடந்த குறித்த ஆர்ப்பாட்டத்திலேயே பொலிசாரால் அவர் குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டுள்ளார். ஸ்வீடனை சேர்ந்த செயற்பாட்டாளரான கிரேட்டா தன்பர் கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக காவல்துறையினரால் கைதுச் செய்யப்படுகிறார்.
ஜனவரி மாதம் ஜேர்மனியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக நடந்த பேரணியில் அவர் கலந்துகொண்ட பிறகு கைது செய்யப்பட்டார். ஒஸ்லோவில் இன்று நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து மற்ற பங்கேற்பாளர்களுடன் கைது செய்யப்பட்டனர், பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாமி என்ற பூர்வகுடி மக்களுக்கு சொந்தமான நிலத்தில் கலைமான் மேய்ச்சல் பகுதியில் இருந்து காற்றாலைகளை அகற்ற வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சாமி என்ற பூர்வகுடி மக்கள் மத்திய மற்றும் வடக்கு நோர்வே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகளிலும் வாழ்கின்றனர். பசுமை எரிசக்தியை ஊக்குவிப்பது சாமி இன மக்களின் உரிமைகளை பறித்து விட்டு வரக்கூடாது என்று ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.
காற்றாலைகளை நிறுவுவதால், அந்த சத்தத்தால் கலைமான்கள் குறிப்பிட்ட பகுதியில் மிரண்டு காணப்படுவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய நாட்களில், சில அரசாங்க கட்டிடங்களுக்கான வழிகளை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுடன் கிரேட்டாவும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.