டொரோண்டோவில் கடும் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை
கனடாவின் டொரோண்டோ பெரும்பாக பகுதியில் கடுயைமான பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்தப் பகுதி முழுவதும் பயணிப்பவர்கள், கூடுதல் பொறுமையுடன் பயணிக்குமாறும், பனிப்பொழிவு காரணமாக சிரமங்களை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டொரோண்டோ மற்றும் GTA பகுதிகள் உட்பட தெற்கு ஒன்ராரியோவின் பெரும்பகுதிக்கு, கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் பனிப்பொழிவு தொடர்பான மஞ்சள் எச்சரிக்கை (Yellow Warning) விடுத்துள்ளது.

டொரோண்டோ நகரில் சுமார் 8 முதல் 12 செ.மீ. அளவிலான “கணிசமான பனிப்பொழிவு” ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“இன்று காலை தாமதமாக பனிப்பொழிவு தொடங்கி, மாலை நேரத்தில் மேற்கு முதல் கிழக்கு நோக்கி முடிவடையும்.
பிற்பகலில் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படலாம் இதனால் பார்வைத் திறன் குறைய வாய்ப்புள்ளது,” என எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயணம் “சவாலானதாக இருக்கும்” என்றும் எச்சரிக்கை குறிப்பிட்டுள்ளது.
காலை 8.30 மணியளவில் டொரோண்டோ நகர மையப் பகுதியில் லேசான பனி பெய்யத் தொடங்கியிருந்தாலும், நாளின் பின்னேரத்தில் அது தீவிரமடையும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
தற்போது டொரோண்டோ, யார்க் பிராந்தியம், டர்ஹாம் பிராந்தியம், பாரி, பீட்டர்பரோ, பெல்வில் உள்ளிட்ட இடங்களுக்கும், தென்மேற்கு மற்றும் வட ஒன்ராரியோவின் பரந்த பகுதிகளுக்கும் இந்த மஞ்சள் எச்சரிக்கை அமலில் உள்ளது.