கனடிய காவல்துறையை மலினப்படுத்தி கருத்து வெளியிட்டாரா கெரி ஆனந்தசங்கரி
கனடிய காவல்துறையை மலினப்படுத்தும் வகையில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைப்பது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தடை செய்யப்பட்ட ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் தண்டனை விதிக்கப்படாது எனவும் காவல்துறையினருக்கு சட்டத்தை அமுல்படுத்த போதியளவு வளங்கள் கிடையாது எனவும் கெரி ஆனந்தசங்கரி கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெயர் குறிப்பிடப்படாத துப்பாக்கி உரிமையாளர் ஓருவருடன் கெரி ஆனந்த சங்கரி தொலைபேசியில் உரையாடும் உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த உரையாடல் தற்பொழுது கசிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் கெரிய ஆனந்தசங்கரிக்கு தெரியாமலேயே இந்த தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக தெரிந்த ஒருவர் தமது அனுமதியின்றி தொலைபேசி உரையாடலை பதிவு செய்து துப்பாக்கி ஆர்வலர்களிடம் வழங்கியுள்ளதாக கெரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமது கருத்து பிழையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தின் திட்டத்தை நடுமுறைப் படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஆனந்தசங்கரியிடம் நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதுவேளை, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருப்போருக்கு நியாயமான நட்டஈடு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.