அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு துப்பாக்கிக் கடத்தல் ; யுவதி உட்பட 4 பேர் கைது
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மிசிசாகாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட 23 துப்பாக்கிகளில் 15 துப்பாக்கிகள் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பீல் பிராந்தியத்தில் கைப்பற்றப்படும் சட்டவிரோத துப்பாக்கிகளில் சுமார் 90 சதவீதமானவை அமெரிக்க எல்லைப் பகுதியிலிருந்து லொறி போக்குவரத்து மற்றும் பியர்சன் சர்வதேச விமான நிலையம் ஊடாக கடத்தி வரப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கடத்தி வரப்படும் துப்பாக்கிகள் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களால் பயன்படுத்தப்படுவது தொடர்பிலும் பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ் அதிபர் நிக் மிலினோவிச், கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் வெறுமனே ஆயுதங்கள் அல்ல எனவும், அவை கப்பம் கோருதல், வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தல் மற்றும் வாகனக் கடத்தல் உள்ளிட்ட வன்முறைக் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான கருவிகள் எனவும் எச்சரித்தார்.
இதனிடையே, இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பிராம்டன் மேயர் பெட்ரிக் பிரவுன், பொதுமக்களின் பாதுகாப்பையும் உயிர்களையும் காப்பாற்ற துணிச்சலுடன் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பீல் பிராந்தியத்தில் இந்த ஆண்டில் இதுவரை 125 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றக் கும்பல்களுக்கும் சட்டவிரோத ஆயுதக் கடத்தலுக்கும் எதிரான நடவடிக்கைகள் தொடரும் எனவும் பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.