அவுஸ்திரேலியாவில் துஸ்பிரயோக புகாரில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிட்னியில் இங்கிலாந்துடன் விளையாடிய இலங்கை அணியில் தனுஷ்க குணதிலக்க இடம்பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தனுஷ்க குணதிலக்க இல்லாமல் இலங்கை அணி இன்று காலை கொழும்பு புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் T20 உலகக் கிண்ணப் போட்டிக்காக இலங்கை அணியுடன் தனுஷ்க குணதிலக்க பயணித்தபோது காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.
இருப்பினும், இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார். இந்த விவகாரம் தொடர்பில் சிட்னி பொலிசார் கூறுகையில், இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக்க டேட்டிங் செயலி மூலம் 29 வயது பெண்ணுடன் பழகி உள்ளார்.
கடந்த 2-ம் திகதி ரோஸ் பே நகரில் உள்ள ஒரு ஹொட்டலில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது அந்த பெண்ணை குணதிலக்க துஸ்பிரயோகம் செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.
மேலும், அனுமதி இன்றி தன்னுடன் உறவு வைத்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார் என கூறியுள்ளனர்.