நியூசிலாந்தில் உள்நாட்டுப் பறவைக்கு H5N1 பறவைக் காய்ச்சல்
முதன்முறையாக, நியூசிலாந்தில் நாட்டின் பூர்வீகப் பறவை இனத்தைச் சேர்ந்த 'சுவாம்ப் ஹாரியர்' (Swamp Harrier) வகை கழுகுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வட தீவின் வைராபா பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கழுகுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, உயிரியல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரூ ஹொகார்ட் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தில் கடந்த புதன்கிழமை அன்று, வெலிங்டன் அருகே கண்டெடுக்கப்பட்ட 'ப்ரவுன் ஸ்குவா' (Brown Skua) எனும் கடல் பறவைக்கு முதன்முதலில் இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தற்போது உள்நாட்டுப் பறவைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, வளர்ப்புப் பறவைகளிடம் (Poultry) இதுவரை நோய் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என ஆண்ட்ரூ ஹொகார்ட் உறுதிப்படுத்தினார்.
நாட்டிலுள்ள மிகவும் அழிந்து வரும் நிலையில் உள்ள ஐந்து பறவை இனங்களைச் சேர்ந்த 300 முக்கிய இனப்பெருக்கப் பறவைகளுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சுகாதார அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
அதேவேளை இந்த மாத தொடக்கத்தில், அவுஸ்திரேலியாவிலும் உள்ளூர் கடல் பறவை ஒன்றிற்குப் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.