உக்ரைன் பாடசாலை கட்டடத்தின் மீது ரஷ்யா 9 குண்டுத் தாக்குதல்கள் ; 31 பேர் உயிரிழப்பு
உக்ரைனின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சபோரிஷியா (Zaporizhzhia) பிராந்தியத்தின் கொமிசுவாகா (Komyshuvakha) பகுதியில் உள்ள பாடசாலை கட்டடம் மீது ரஷ்யா நடத்திய ஒன்பது குண்டுத் தாக்குதல்களில், அங்கு தஞ்சமடைந்திருந்த 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 48 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கட்டடம் பொதுமக்களுக்கான தற்காலிக பாதுகாப்பு மையமாகவும், மனிதாபிமான உதவிகளை விநியோகிக்கும் நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்ததாக பிராந்திய ஆளுநர் மைக்கைலோ செமிகின் (Mykhailo Semikin) உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்காக ரஷ்யா KAB-500 மற்றும் மூன்று தொன் எடையுடைய FAB-3000 ரக வலிமையான வானூர்திக் குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் தாக்கத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கொங்கிறீற்றினால் ஆன நிலத்தடி கட்டடம் முற்றாக இடிந்து தீப்பற்றியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முதற்கட்டத் தாக்குதலுக்குப் பின்னர் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ரஷ்யப் படைகள் இரண்டாவது தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இரண்டாவது தாக்குதலில் இரண்டு மீட்புப் பணியாளர்களும் நான்கு காவல்துறை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ள யுக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelensky), அமெரிக்க காங்கிரஸ் இடைக்காலத் தேர்தல் நடைபெறும் அதே நாளில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.