ஹைதியை பேரழிவுக்கு உள்ளாக்கிய நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 304 ஆக உயர்வு!

Shankar
Report this article
ஹைதி தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுகளில் ஒன்று ஹைதி. இங்கு நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.2ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ஹைதியின் தலைநகர் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. மக்கள் அனைவரும் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இதுவரை கட்டட இடிபாடுகளில் சிக்கி சுமார் 304 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
கட்டட இடிபாடிகளில் பலர் சிக்கி இருப்பதால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.