கனடாவின் ஹாலிஃபாக்ஸில் கத்தியை காட்டி மிரட்டியவர் மீது துப்பாக்கிச் சூடு
கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில், கைது நடவடிக்கையின் போது கத்தியை காட்டி பொலிஸாரை மிரட்டியதாக கூறப்படும் நபர் மீது, ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறையினருள் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாரதூர சமப்வங்கள் குறித்து பதிலளிக்கும் பிரிவு (SiRT) விசாரணையை தொடங்கியுள்ளது.
கிராஃப்டன் ஸ்ட்ரீட் 1616-ல் அமைந்துள்ள கடையொன்றில் கொள்ளை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை முயற்சி
சந்தேகநபர் கடையை விட்டு வெளியேறும் போது, ஊழியர்கள் மீது ரசாயனத் தெளிப்பு பயன்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறுகிய நேர இடைவெளியில் குவின்பூல் சாலை 6169-ல் உள்ள மற்றொரு கடையிலும் இதே நபர் கொள்ளை முயற்சி மேற்கொண்டதாக தகவல் கிடைக்கப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கும் கடையை விட்டு வெளியேறும் போது அதே வகையான ரசாயனத் தெளிப்பை பயன்படுத்தியதாக ஊழியர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், போலீசார் குவின்பூல் சாலையில் சந்தேகநபரை கண்டுபிடித்தனர். கைது நடவடிக்கையின் போது, அவர் பெரிய கத்தி ஒன்றை காட்டி போலீசாரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
உடனடியாக கத்தியை கீழே போடுமாறு போலீசார் உத்தரவிட்டனர். அமைதியான முறையில் கத்தியை கைப்பற்ற பொலிஸார் எடுத்த முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மற்றொரு அதிகாரி தனது பணித் துப்பாக்கியை பயன்படுத்தி சந்தேகநபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 37 வயதான அந்த நபர், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.