ட்ரம்பின் பதவியேற்போடு முற்றாக அழியப்போகும் ஹமாஸ் சாம்ராஜ்யம்
காசாவில் ஹமாஸை முழுமையாக தோற்கடிப்பதற்கான ஒரு திட்டத்தை முன்வைக்குமாறு இஸ்ரேல் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழையும் நேரத்தில் ஹமாஸ் அமைப்புடன் பணயக்கைதிகள் ஒப்பந்தம் கையெழுத்திடப்படாவிட்டால் இந்த திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்றும் கட்ஸ் எச்சரித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்கும் நேரத்தில் பணயக்கைதிகள் ஒப்பந்தம் நிறைவேறவில்லை என்றால், காசாவில் ஹமாஸின் முழுமையான தோல்வி ஏற்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜனவரி 20 அன்று ட்ரம்பின் பதவியேற்பதற்கு முன்பு ஹமாஸ் அமைப்பினால் பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் நரகத்தை காண நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
இவ்வாறனதொரு பின்னணியில், ஹமாஸால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளில் சேர மொசாட் தலைவர் டேவிட் பார்னியாவுக்கு இன்று இரவு தோஹா செல்ல பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கத்தாரில் மத்தியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நெதன்யாகுவின் முடிவு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, நெதன்யாகு அனுமதி வழங்க முடிவு செய்தால், உயர்மட்டக் குழு அடுத்த 24 மணி நேரத்தில் புறப்படும் என்று இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், ஹமாஸ் அமைப்பு இதுவரையிலும் இஸ்ரேலுக்கு உயிருள்ள பணயக்கைதிகளின் பட்டியலை வழங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.