கனடாவில் சீரற்ற வானிலை குறித்து கடும் எச்சரிக்கை
கனடாவில் சீரற்ற வானிலை தொடர்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் கனடாவின் பல மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் வெப்ப அலை, மோசமான காற்றுத் தரம் மற்றும் கடும் இடி மின்னல் தொடர்பான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
191 வெப்ப மற்றும் மின்னலுக்கு தொடர்பான எச்சரிக்கைகள், 342 காற்றுத் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஒன்டாரியோ, குவெபெக், ஆல்பர்டா, நியூஃபவுண்லாந்து மற்றும் லாப்ரடோர் ஆகிய மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆல்பர்டாவில், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் வெப்பநிலை 30°C வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூஃபவுண்லாந்து மற்றும் லாப்ரடோரில், வெப்பம் 33°C வரை உயரும் எனவும், நீண்ட நாள் வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தென் ஒன்டாரியோவில், வருகிற வாரம் முழுவதும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாகவே இருக்கும்.
உடல் வெப்பம் அதிகரித்தல், வியர்வை இல்லாத நிலை, மயக்கம், குழப்பம், உளறல் போன்றவை வெப்ப அலை காரணமாக ஏற்படும் ஆபத்தான அறிகுறிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்டாரியோவிலும் கியூபெக்கிலும் இடி மின்னலுக்கான கடுமையான எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.